மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில், காட்டாஸ்பத்திரி பகுதியில், நேற்று முன்தினம் (31) மாலை, மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்குச் சென்று தனியார் பேருந்தில் வீடு திரும்பிய நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களுடன் கடத்தப்பட்ட சம்பவம், உள்ளூர் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான காணொளி ஆதாரமும் வெளியாகியுள்ளது.
தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த ஒருவர், நேற்று முன்தினம் (31) மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் பங்கேற்று, மாலை தனியார் பேருந்தில் தலைமன்னார் நோக்கிப் பயணித்தார்.
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில், காட்டாஸ்பத்திரி பகுதியில், ஒரு குழுவினர் பேருந்தை வழிமறித்து, கூரிய ஆயுதங்களால் பயணிகளை அச்சுறுத்தி, குறித்த நபரைத் தாக்கி, பேருந்திலிருந்து இறக்கி, மோட்டார் சைக்கிளில் கத்தி முனையில் கடத்திச் சென்றனர்.
பின்னர், கடத்தப்பட்ட நபரை நடுக்குடா காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கிய பின்னர் விடுவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கடத்தலில், காட்டாஸ்பத்திரி கிராமத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் குழு ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
காட்டாஸ்பத்திரி பகுதியில் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பாக பேசாலை பொலிஸார் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் அசமந்தமாகச் செயல்படுவதாகவும் உள்ளூர் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது பிரதேசத்தில் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.